அதிர்ச்சி... ரேஷன் பொருட்களை வீடு தேடி வழங்குவதில் புதிய சிக்கல்.. மொத்தமாக முடங்கும் அபாயம்! 

 

தமிழக அரசின் மிக முக்கியத் திட்டங்களில் ஒன்றான, முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் 'தாயுமானவர் திட்டம்' அடுத்த மாதம் முதல் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உள்ள தொழில்நுட்ப மற்றும் நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், ஜூலை 1 முதல் வீடு தேடிப் பொருட்கள் வழங்கும் பணியை முற்றிலுமாகப் புறக்கணிக்கப் போவதாக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஜி. ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் விளக்கிய போது, வீடு தேடிச் சென்று பொருட்கள் வழங்கும் போது, பயோமெட்ரிக் சரிபார்ப்பிற்காகப் பயன்படுத்தப்படும் 'ப்ளூடூத்' அச்சு இயந்திர முறை அடிக்கடி இணையத் துண்டிப்பு மற்றும் இணைப்புச் சிக்கல்களைச் சந்திக்கிறது. இதனால் ஒரு கார்டுதாரருக்குப் பொருட்களை வழங்க நீண்ட நேரமாகிறது.

ரேஷன் கடைகளில் ஏற்கனவே ஆள் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், கடையில் இருக்கும் ஊழியரே பொருட்களை எடுத்துக்கொண்டு முதியவர்களின் வீடுகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் கடையில் இருக்கும் மற்ற பொதுமக்களுக்குப் பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு, ஊழியர்கள் பொதுமக்களின் ஆத்திரத்திற்கு ஆளாக நேரிடுகிறது. எனவே, இத்திட்டத்திற்கெனத் தனிப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்வதை முறைப்படுத்த, நடமாடும் ஊழியர்களுக்குத் தனியாக அதிநவீன பிஎஸ்ஓ கருவிகளைத் தரமான முறையில் அரசு வழங்க வேண்டும். தாயுமானவர் திட்டத்தின் கீழ் உன்னதமான நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்தச் சேவையில் உள்ள குறைகளைத் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உடனடியாகத் தலையிட்டுத் தீர்க்க வேண்டும் என்று சங்கம் கோரியுள்ளது.

"ஏழை எளிய முதியவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் சேவை செய்வதில் எங்களுக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், போதிய உள்கட்டமைப்பு வசதிகளோ, கூடுதல் ஊழியர்களோ இல்லாமல் இந்தப் பணியைத் தொடர்வது சாத்தியமற்றது. வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜூலை 1 முதல் இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி முழுமையாகப் புறக்கணிக்கப்படும்" என்றனர்.

அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி இந்தச் சிக்கலைத் தீர்க்காவிட்டால், அடுத்த மாதம் முதல் ரேஷன் கடைக்கு நேரில் வர முடியாத ஏழை முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கடும் அவதிக்குள்ளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.