அதிர்ச்சி... நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர், தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாகப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ், ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் நித்யஸ்ரீ (19). இவர் புதுச்சேரி அரசு நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய நித்யஸ்ரீ, திடீரென வீட்டில் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்துப் பார்த்தபோது நித்யஸ்ரீ சடலமாகக் கிடப்பதைக் கண்டு கதறித் துடித்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த முத்தியால்பேட்டை போலீசார், நித்யஸ்ரீயின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கல்லூரிக்குச் சென்று வந்த மாணவி திடீரென தற்கொலை செய்துகொள்ளக் காரணம் என்ன? கல்லூரி ரீதியான ஏதேனும் அழுத்தமா? அல்லது குடும்பப் பிரச்சினையா? என்பது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் பரபரப்பையும், சக கல்லூரி மாணவர்களிடையே ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.