ஆதிர்ச்சி... பாகிஸ்தான் பெண் அனுப்பிய ஆபாசப் புகைப்படங்களுக்கு மயங்கிப் போர் விமான ரகசியங்களைப் பகிர்ந்த இந்திய அதிகாரி!
பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்புடைய பெண் ஒருவர் அனுப்பிய ஆபாசப் புகைப்படங்களுக்கு மயங்கி, இந்திய விமானப்படையின் மிக முக்கியமான ரகசியப் போர் ஆவணங்கள் மற்றும் ராணுவத் தகவல்களைப் பகிர்ந்த விங் கமாண்டர் ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான இச்சம்பவம் ராணுவ வட்டாரத்திலும் பொதுவெளியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகளைத் தங்களது வலையில் வீழ்த்தச் சமூக வலைதளங்கள் மூலம் 'ஹனி டிராப்' எனப்படும் வலையை விரித்து வருவது வாடிக்கையாக உள்ளது.
பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்புடைய பெண் ஒருவர், இந்திய விமானப்படையில் விங் கமாண்டராகப் பணியாற்றி வந்த அதிகாரியுடன் சமூக வலைதளம் மூலமாகப் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். தொடர்ந்து அந்தப் பெண் அனுப்பிய ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு மயங்கிய அந்த அதிகாரி, அதற்குப் பிரதிபலனாக இந்திய விமானப்படையின் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
உளவுத்துறை அதிகாரிகள் நடத்திய தீவிரக் கண்காணிப்பில், இந்த விங் கமாண்டரின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் கண்டறியப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து அவரை டெல்லியில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விங் கமாண்டர், நாட்டின் பாதுகாப்புத் துறை சார்ந்த மிக முக்கியமான ஆவணங்களை எதிரி நாட்டு உளவாளியிடம் ஒப்படைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்திய விமானப்படையின் நவீன ஆளில்லா விமானங்கள் (டிரோன்) பிரிவின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த ரகசிய விவரங்கள். முக்கியமான போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தளங்கள் மற்றும் அவற்றின் நகர்வுகள் குறித்த தகவல்கள். இந்திய விமானப்படை மேற்கொள்ளும் முக்கிய ராணுவப் பயிற்சிகள் மற்றும் வியூகங்கள் தொடர்பான ரகசிய ஆவணங்கள்.
கைது செய்யப்பட்ட விங் கமாண்டரிடம் உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த உளவு வலையில் இந்திய விமானப்படை அல்லது பிற பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த வேறு அதிகாரிகள் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், இவரிடமிருந்து வேறு என்னென்ன முக்கிய ஆவணங்கள் கசிந்துள்ளன என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.