அதிர்ச்சி.. சிக்னலை சட்டையால் மூடி ரயிலை நிறுத்திய கொள்ளையன் - நெல்லை எக்ஸ்பிரஸில் நகை பறிப்பு!
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணியிடம் நூதன முறையில் நகை பறிக்கப்பட்ட துணிகரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலை நிறுத்துவதற்காக ரயில்வே சிக்னலை சட்டையால் மூடி, சதித் திட்டம் தீட்டி கொள்ளையன் இந்த துணிகரச் செயலில் ஈடுபட்டுள்ளான்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அசுதா என்ற பெண் பயணி, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தார். ரயில் சென்னைக்கு அருகே வந்து கொண்டிருந்த போது, சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்ற நபர் தண்டவாள ஓரத்தில் இருந்த ரயில்வே சிக்னல் விளக்கை தனது சட்டையால் மூடி மறைத்துள்ளார். இதன் காரணமாக, சிக்னல் கிடைக்காமல் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் திடீரென நின்றது. ரயில் நின்றதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட குமரேசன், உடனடியாக ரயிலுக்குள் ஏறியுள்ளார்.
ரயிலுக்குள் நுழைந்த குமரேசன், ஜன்னலோரம் அமர்ந்திருந்த பெண் பயணி அசுதாவின் கழுத்தில் இருந்த தங்க நகையை கண் இமைக்கும் நேரத்தில் பலவந்தமாகப் பறித்துக் கொண்டு ரயிலில் இருந்து குதித்து தப்பியோடினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் பயணி கூச்சலிடவே, சக பயணிகள் மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாக ரயில்வே போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன் எல்லைக்குட்பட்ட ரயில்வே போலீசார்மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தப்பியோட முயன்ற கொள்ளையன் குமரேசனை போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
அவரிடமிருந்த தங்க நகையும் பத்திரமாகப் பறிமுதல் செய்யப்பட்டது. சிக்னலை மறைத்து ரயிலை நிறுத்தி, கொள்ளையடித்த இந்த நூதன சம்பவம் ரயில்வே வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குமரேசனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.