பசிக் கொடுமை... ரோட்டோரம் இறந்து கிடந்த நாயின் இறைச்சியை பச்சையாக உண்ட நபரால் பரபரப்பு!

 

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் இறந்து கிடந்த நாயின் உடலிலிருந்து இறைச்சியை எடுத்து நபர் ஒருவர் உண்ட கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் பகுதியில் வழக்கம் போல் பொதுமக்கள் சென்று கொண்டிருந்த சாலையில் நாய ஒன்று இறந்து கிடந்துள்ளது. அந்த வழியாக வந்த நபர் ஒருவர், திடீரென சாலையில் இறந்து கிடந்த நாயின் அருகில் அமர்ந்து அதன் இறைச்சியைச் சாப்பிடத் தொடங்கியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக ஓடிச்சென்று அவரைத் தடுத்து நிறுத்த முயன்றனர்.

பொதுமக்கள் எவ்வளவு முயன்றும் அந்த நபர் அவர்களின் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து அப்படியேயும் சாப்பிட்டுக் கொண்டிருந்ததால், என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் திகைத்துப் போயினர். இச்சம்பவம் குறித்த தகவல் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த நபரை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

இதனிடையே, அங்கிருந்தவர்கள் இதனைத் தங்கள் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட, தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.