பெரும் அதிர்ச்சி... பஞ்சாப்பில் RPG, RDX மற்றும் 'ஸ்டிக்கி பாம்' பறிமுதல் - பாகிஸ்தான் ISI பின்னணி அம்பலம்!
பஞ்சாப் மாநிலம் தரன் தரன் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், நாசவேலைகளுக்குத் திட்டமிடப்பட்டிருந்த நவீன ரக ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் சிக்கியுள்ளன.
கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி பாட்டியாலாவின் ஷம்பு பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் குண்டு வைக்கும் முயற்சியின் போது, ஐ.இ.டி வெடிகுண்டு முன்கூட்டியே வெடித்ததில் ஜக்ரூப் சிங் என்ற பயங்கரவாதி உயிரிழந்தான். இந்தச் சம்பவம் குறித்துப் பாட்டியாலா போலீசார் மற்றும் மாநில சிறப்பு அதிரடிப்படை நடத்திய தொடர் விசாரணையில், தரன் தரன் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதக் கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டது.
தரன் தரன் மாவட்டத்தின் பஞ்வார் குர்த் கிராமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கீழ்க்கண்டவை பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு ராக்கெட் லாஞ்சர் வகை ஆயுதம், சுமார் 1.5 கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருள், வாகனங்களில் ஒட்டி வைத்து வெடிக்கச் செய்யக்கூடிய 2.3 கிலோ எடையுள்ள சக்திவாய்ந்த ஸ்டிக்கி வெடிகுண்டு, ஒரு அதிநவீன 'கிளாக்' ரகத் துப்பாக்கி உட்பட 3 கைத்துப்பாக்கிகள் மற்றும் 84 தோட்டாக்கள். கைக்குண்டுகள், டிட்டனேட்டர்கள் மற்றும் டைமர் சுவிட்சுகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தச் சதிக்குப் பின்னால் பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI-யின் தூண்டுதலின் பேரில் செயல்படும் காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மலேசியாவிலிருந்து 'ஜுஜார் சிங்' என்பவர் மூலம் நிதியுதவி வழங்கப்பட்டதும், அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதத் தலைவர்களுடன் இந்த கும்பல் தொடர்பில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் ஜக்ரூப் சிங்கின் சகோதரர் சத்னம் சிங் உட்பட 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த காலங்களில் நடந்த ரயில்வே தண்டவாள குண்டுவெடிப்பு மற்றும் மோகாவில் உள்ள சி.ஐ.ஏ (CIA) அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட கையெறி குண்டுத் தாக்குதல் ஆகியவற்றிலும் தொடர்புடையவர்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.