அதிர்ச்சி.. பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்!

 

 

பள்ளி  மாணவிகளுக்கு தலைமையாசிரியரே பாலியல் தொல்லைக் கொடுத்து வந்த சம்பவ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சிறுகன்பூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று முறைப்படி இயங்கி வருகிறது.

இந்த கிராமத்துப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாகச் சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த 55 வயது காட்டுராஜா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக இதே பள்ளியில் இவர்  தற்காலிகத் தலைமை ஆசிரியராகவும் கூடுதல் பொறுப்பேற்றுப் பணிகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறார்.

இந்நிலையில், தனது உயர் பொறுப்பைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு, பள்ளியில் 7 மற்றும் 8 ம் வகுப்பு படித்து வந்த மாணவிகளிடம் தவறான அர்த்தத்தில் பேசி ஆபாசமாக வந்துள்ளார். ஒரு கட்டத்தில், பள்ளி வகுப்பறைகளில் மாணவிகளை தனியே அழைத்து, மாணவிகளின் உடலைத் தொட்டுப் பாலியல் சீண்டல்களிலும் ஈடுபட்டு வந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களின் பெற்றோரிடம் கண்ணீருடன் கூற, அவர்கள் பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகளுக்கு அவசரமாகத் தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் ராஜூவ்காந்தி தலைமையிலான குழுவினர் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில் காட்டுராஜாவின் பாலியல் அத்துமீறல்கள் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமை ஆசிரியர் காட்டுராஜாவைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.