அதிர்ச்சி... ஹெல்மெட்டால் தாக்கி மாமியாரைக் கொன்ற மருமகன்!
தெலங்கானா மாநிலம் மேட்சல் மால்காஜ்கிரி மாவட்டத்தில், தனது மாமியாரை பைக்கில் அழைத்துச் சென்று ஹெல்மெட்டால் தாக்கி கொடூரமாகக் கொலை செய்த மருமகனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
செங்கிசெர்லா பகுதியைச் சேர்ந்த அருணா (39) என்பவரது மகள் காவ்யாவை, ஸ்நேஹித் (28) என்பவர் கடந்த ஆண்டு காதலித்துத் திருமணம் செய்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாகத் தனது மாமியாரைத் திட்டமிட்டுச் சதி செய்து ஸ்நேஹித் கொலை செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
சம்பவத்தன்று அருணாவிடம் தனது மனைவிக்கு அறிவுரை கூற வருமாறு கூறி ஸ்நேஹித் அவரைத் தனது பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு தனது மனைவி காவ்யாவிற்கு போன் செய்த அவர், அருணாவிற்குப் பயணத்தின் போது வலிப்பு வந்து கீழே விழுந்து விட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். ஆனால், மருத்துவமனைக்குச் சென்று பார்த்த காவ்யா, தனது தாய் ரத்தக்காயங்களுடன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
ஸ்நேஹித்தின் நடத்தையில் சந்தேகம் அடைந்த காவ்யா அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அருணாவை அழைத்துச் சென்ற ஸ்நேஹித், அங்கு அவரை ஹெல்மெட்டால் சரமாரியாகத் தாக்கி கொலை செய்தது அம்பலமானது. கைதான ஸ்நேஹித் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குடும்பப் பிரச்சினையால்தான் இந்த விபரீத முடிவை அவர் எடுத்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.