அதிர்ச்சி... மாணவியை ஏமாற்றி மது குடிக்க வைத்து, பலாத்காரம் செய்த சக மாணவர்!

 

தெலுங்கானா மாநிலத்தில் டீ குடிக்க அழைத்துச் செல்வதாகக் கூறி, பி.டெக் மாணவி ஒருவருக்குக் கட்டாயமாக மது குடிக்க வைத்து, தங்கும் விடுதிக்குக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சக மாணவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தெலுங்கானா மாநிலம், யாதாத்திரி புவனகிரி மாவட்டம், சவுட்டுப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் உதய். இவர் இப்ராகிம்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவருடன் படிக்கும் சக மாணவி ஒருவருடன் உதய் நட்பாகப் பழகி வந்துள்ளார்.

கடந்த மே 14-ம் தேதியன்று, மாணவியிடம் வெளியில் சென்று 'டீ' குடித்துவிட்டு வரலாம் எனக் கூறி, உதய் தனது காரில் தில்சுக்நகரில் உள்ள ஒரு காபி ஷாப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் காபி அருந்தியுள்ளனர்.

காபி குடித்துவிட்டு மீண்டும் இப்ராகிம்பட்டினம் திரும்பும் வழியில், உதய் அங்குள்ள ஒரு மதுக்கடையில் மது பாட்டில்களை வாங்கியுள்ளார். பின்னர், பி.டி.எல் சாலையில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வெறிச்சோடிய பகுதிக்கு மாணவியைக் காரில் அழைத்துச் சென்றுள்ளார். அந்தத் தனிமையான இடத்தில் வைத்து, மாணவியின் எதிர்ப்பையும் மீறி அவரை உதய் கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்துள்ளார். சிறிதும் எதிர்பாராத விதமாக மது அருந்தியதால், அந்த மாணவிக்குக் கடுமையான போதை தலைக்கேறி, சுயநினைவை இழக்கும் நிலைக்குச் சென்றுள்ளார்.

மாணவியின் இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்ட உதய், அவரை இப்ராகிம்பட்டினத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மயக்க நிலையில் இருந்த மாணவியைக் கொடூரமாகப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

பின்னர் போதை தெளிந்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி, இப்ராகிம்பட்டினம் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்துக் கண்ணீருடன் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த மாணவர் உதயைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், நேற்று அவரை அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.