அதிர்ச்சி... வீடு புகுந்து ஆசிரியையிடம் நகை பறிப்பு - சக ஆசிரியை, கூட்டாளியுடன் கைது!

 

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தனியாக இருந்த ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, அவரைத் தாக்கி 6 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற வழக்கில், அவருடன் பணியாற்றும் சக ஆசிரியை மற்றும் அவரது தோழி ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

allowfullscreen

சோழவந்தான் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. தனியார் பள்ளி ஆசிரியையான இவர், கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, உள்ளே புகுந்த நபர் ஒருவர் அவரது வாயைப் பொத்தித் தாக்கி, கழுத்தில் இருந்த 6 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சோழவந்தான் காவல்துறையினர், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, இதில் ராஜலட்சுமியுடன் அதே பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியை அன்னபூரணிக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

ராஜலட்சுமியிடம் நெருங்கிப் பழகிய அன்னபூரணி, அவரது வீட்டில் நகைகள் இருப்பதை அறிந்து கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டியுள்ளார். இதற்காகத் தனது தோழியான கனிமொழி என்பவரைப் பயன்படுத்தி இக்கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியை அன்னபூரணி மற்றும் அவரது கூட்டாளி கனிமொழி ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்த 6 சவரன் நகையை மீட்டு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.