undefined

அதிர்ச்சி... திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண், பாட்டி இரட்டைக் கொலை... பொள்ளாச்சியில் பரபரப்பு!

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆவல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டேகவுண்டன்பாளையம் கிராமத்தில் நேற்று இரவு பி. கௌசிகா (16) மற்றும் அவரது பாட்டி எம். மயிலாத்தாள் (65) என இரட்டைக் கொலை அரங்கேறியுள்ளது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடன் கௌசிகாவின் சகோதரி ஹரிதா (17) என்பவரும் காயமடைந்துள்ளார். நெகமம் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (24) என்பவர், திருமணத்திற்கு மறுத்த ஆத்திரத்தில் குத்திக் கொலை செய்துள்ளார்..

கௌசிகாவும் அபிஷேக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அபிஷேக் தனது பெற்றோருடன் கௌசிகாவின் வீட்டிற்குச் சென்று முறைப்படி பெண் கேட்டுள்ளார். ஆனால் கௌசிகாவிற்கு இன்னும் திருமண வயது (18) ஆகாததால், அவர் படிப்பை முடித்த பிறகு திருமணம் செய்து வைப்பதாகப் பெண் வீட்டார் தெரிவித்துள்ளனர்.

திருமணத்தை உடனடியாக நடத்த வேண்டும் என வற்புறுத்தி வந்த அபிஷேக், நேற்று மாலை கௌசிகாவின் வீட்டிற்குச் சென்று தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த அபிஷேக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கௌசிகாவைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதைப் தடுக்க முயன்ற பாட்டி மயிலாத்தாள் மற்றும் சகோதரி ஹரிதா ஆகியோரையும் அவர் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் கௌசிகாவும், மயிலாத்தாளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஹரிதா தற்போது பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெகமம் போலீசார், சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய குற்றவாளி அபிஷேக்கை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.