பரிசோதனையில் அதிர்ச்சி... கடலூரில் கோழிகள் உயிரிழப்புக்குப் பறவைக் காய்ச்சலே காரணம்!
கடலூர் மாவட்டத்தின் சில கிராமங்களில் அண்மையில் கோழிகள் திடீரென உயிரிழந்ததற்குப் பறவைக் காய்ச்சல் (H5N1) தொற்றே காரணம் என்பது ஆய்வகப் பரிசோதனையில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கட்டியங்குப்பம் மற்றும் கிருஷ்ணகுப்பம் ஆகிய கிராமங்களில் கடந்த சில நாட்களாகப் பண்ணை மற்றும் நாட்டுக்கோழிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்து வந்தன. இது அப்பகுதி கோழிப் பண்ணையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
கோழிகளின் திடீர் உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிய கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் நேரில் சென்று இறந்த கோழிகளின் மாதிரிகளைச் சேகரித்து உயர்நிலை ஆய்வகத்திற்குப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆய்வகப் பரிசோதனை முடிவுகளில், உயிரிழந்த கோழிகளுக்குப் பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நோய் மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இத்தொற்று பாதிப்பு குறித்து மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம், தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு அவசரக் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி உடனடியாகப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டியங்குப்பம், கிருஷ்ணகுப்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளைக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவர கால்நடை பராமரிப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பண்ணைகளில் கிருமிநாசினி தெளித்தல், பறவைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்தல் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.