அதிர்ச்சி... தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்த நாயை சுட்டுக் கொன்றதுடன், தட்டிக்கேட்ட உரிமையாளரையும் சுட்ட வாலிபர்!
உத்தர பிரதேசத்தில் தன்னை பார்த்து தொடர்ந்து குரைத்த செல்லப்பிராணி நாயை சுட்டுக்கொன்றதுடன், அதைத் தட்டிக்கேட்க வந்த உரிமையாளரையும் துப்பாக்கியால் சுட்ட நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் போஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வஜித் (45) என்பவர், வியாழக்கிழமை இரவு பண்ணை வீட்டிற்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த விகாஷ் (23) என்பவரின் நாய் அவரைப் பார்த்து குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விஸ்வஜித், தான் வைத்திருந்த துப்பாக்கியால் நாயை சுட்டதில் அது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு வெளியே வந்த நாயின் உரிமையாளரான விகாஷ் மீதும் விஸ்வஜித் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த விகாஷை, கிராம மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சம்பவத்திற்குப் பின் தலைமறைவாக உள்ள விஸ்வஜித்தை பிடிப்பதற்குத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.