அதிர்ச்சி... சிங்கப்பெண் திட்ட அணிவகுப்பு.. பெண் காவலரின் நகை, பணம் திருட்டு!
சென்னை ஆவடியில் நடைபெற்ற 'சிங்கப்பெண்' திட்டத் தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்க வந்த பெண் காவலர் ஒருவரின் தங்க நகை மற்றும் பணம் திருடு போன சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான கிருபா, சென்னை கிண்டி ஆயுதப்படையில் (பெண் காவலராகப் பணியாற்றி வருகிறார். தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்த 'சிங்கப்பெண்' திட்டத்தின் சிறப்புப் படைப் பிரிவு அணிவகுப்பில் பங்கேற்பதற்காக, கடந்த ஜூன் 9-ஆம் தேதி கிருபா ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 2-ஆம் அணி மைதானத்திற்கு வந்துள்ளார்.
அணிவகுப்பு பயிற்சிக்காகச் சென்றபோது, அவர் தனது உடைமைகளை அங்கிருந்த சக காவலர்களுக்கான தற்காலிகத் தங்குமிட அறையில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
அணிவகுப்புப் பயிற்சி மற்றும் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு கிருபா மீண்டும் தனது அறைக்குத் திரும்பி வந்து பார்த்தபோது, அவர்து பையில் வைக்கப்பட்டிருந்த தங்க நகை மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மர்ம நபர்கள் யாரோ அவர் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திப் பையிலிருந்த நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பெண் காவலரின் உடைமைகளே, காவல் படை மைதானத்திற்குள் வைத்துத் திருடப்பட்ட சம்பவம் அங்கு தங்கியிருந்த பிற காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்துப் பெண் காவலர் கிருபா உடனடியாக ஆவடி காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள ஆவடி குற்றப்பிரிவு போலீசார், மைதான வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், அன்றைய தினம் அந்தத் தங்குமிட பகுதிக்கு வந்து சென்ற நபர்கள் மற்றும் சக ஊழியர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை காவல் துறைக்குள்ளேயே அரங்கேறியுள்ள இந்தத் திருட்டுச் சம்பவம் தற்போதைய முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.