அதிர்ச்சி... 24 இந்திய மாலுமிகளுடன் சென்ற சரக்கு கப்பல் மீது அமெரிக்க கடற்படைத் தாக்குதல்!

 

மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் போர் பதற்றத்தின் உச்சகட்டமாக, அரபிக்கடலில் 24 இந்திய மாலுமிகளுடன் பயணித்த பிரம்மாண்ட சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கப்பல் தீப்பற்றி எரிந்துள்ளது. ஓமன் நாட்டு கடற்படையினர் நல்வாய்ப்பாக 24 இந்தியர்களையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த சில மாதங்களாகவே போர் சூழல் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கியுள்ள நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டுத் தாக்குதலை நடத்தின. இதற்குப் பதிலடியாக, அமெரிக்கப் படைத்தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான்  ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஈரானின் முக்கியத் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றிலும் முடக்கியுள்ளதுடன், அங்குச் செல்லும் கப்பல்களையும் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. மறுபுறம், ஹர்முஸ் ஜலசந்தி வழியே செல்லும் கப்பல்களை ஈரான் ராணுவம் தாக்கி வருகிறது.

இந்நிலையில், ஓமன் நாட்டின் மார்ஷல் தீவு அருகே அரபிக்கடல் பகுதியில் சர்வதேசச் சரக்கு கப்பல் ஒன்று இன்று காலை பயணித்துக் கொண்டிருந்தது. அந்த கப்பலில் மிக முக்கியப் பொறுப்புகளில் 24 இந்திய மாலுமிகள் பணியாற்றி வந்தனர். கப்பல் மார்ஷல் தீவு எல்லையைக் கடந்தபோது, திடீரென  வீசப்பட்ட ஏவுகணை குண்டுகளால் பயங்கரத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நிலைதடுமாறிய அந்த சரக்கு கப்பல் நடுவழியிலேயே மளமளவெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு, கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டதால், அதிலிருந்த இந்திய மாலுமிகள் உடனடியாக சர்வதேச கடற்படை உதவி மையத்திற்கு அவசரக் கட்டுப்பாட்டு அழைப்பு விடுத்தனர். அதிர்ஷ்டவசமாக, அந்த கடல் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஓமன் நாட்டு கடற்படையினர் விரைந்து செயல்பட்டு, தீப்பற்றி எரிந்த கப்பலில் இருந்து 24 இந்திய மாலுமிகளையும் எவ்வித காயமுமின்றி நல்வாய்ப்பாகப் பத்திரமாக மீட்டனர். ஈரான் துறைமுகங்களை முடக்கும் நோக்கில், இந்த தாக்குதலை அமெரிக்க கடற்படையே நடத்தியிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.