அதிர்ச்சி... சீனா கொடுத்த பரிசுப் பொருட்களைக் குப்பையில் வீசிய அமெரிக்க அதிகாரிகள்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 2 நாள் சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று நாடு திரும்பியுள்ளார். அவருடன் தனி விமானத்தில் சென்ற தொழிலதிபர் எலான் மஸ்க், ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் அமெரிக்கா திரும்பினர்.
இந்நிலையில், சீனாவில் ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு அந்நாட்டு அதிகாரிகள் வழங்கிய அனைத்துப் பரிசுப் பொருட்களையும், அமெரிக்க அதிகாரிகள் அங்கேயே குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரம்ப் மற்றும் அவரது குழுவினர் தங்களுக்குச் சீன அதிகாரிகள் வழங்கிய அனைத்துப் பரிசுகளையும், நினைவுப் பொருட்களையும் பீஜிங் விமான நிலையத்திலேயே குப்பைத் தொட்டியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். தங்களை ரகசியமாகக் கண்காணிக்கும் சிறிய சில்லுகள் அல்லது கணினிகளை முடக்கும் ஆபத்தான மென்பொருட்கள் ஏதேனும் இந்த பொருட்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற பாதுகாப்பு அச்சத்தின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பரிசுப் பொருட்கள் அனைத்தையும் விமான நிலையத்திலேயே விட்டுச் செல்ல பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பாதுகாப்புத் துறையினரால் எடுக்கப்பட்ட இந்த விசித்திரமான நடவடிக்கை தொடர்பான வீடியோக்கள் மற்றும் நேரடிப் படக்காட்சிகள் தற்போது இணையதளப் பக்கங்களில் வெளியாகி மிக வேகமாகப் பரவி வருகின்றன. சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தால், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பகைமை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையால் வெளிநாட்டு அரசுப் பரிசுகள் குப்பையில் வீசப்பட்ட இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.