அதிர்ச்சி... பிரேக் இல்லாமல் 463 கி.மீ., ஓடிய வந்தே பாரத் ரெயில்!
ஜார்கண்டில் இருந்து உத்தரபிரதேசம் நோக்கி சென்ற காலியான வந்தே பாரத் ரெயில், பிரேக் சரியாக செயல்படாத நிலையிலும் 463 கி.மீ., தூரம் பயணித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் 24-ம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ஹட்டியாவில் இருந்து உத்தரபிரதேசத்தின் ஜான்சி நோக்கி, வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் சரக்கு ரெயில் என்ஜின் மூலம் கொண்டு செல்லப்பட்டன. அப்போது வந்தே பாரத் ரெயிலின் பிரேக் அமைப்பை சரக்கு ரெயில் என்ஜினுடன் முறையாக இணைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பிரேக்கின் செயல்பாடு சரியில்லாததை கண்டறிந்த முதல் என்ஜின் டிரைவர், ராஞ்சி ரெயில் நிலையத்தில் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து முரி ரெயில் நிலையத்தில் பொறுப்பேற்ற மற்றொரு டிரைவரும் இதுகுறித்து எச்சரித்துள்ளார். இருப்பினும் ரெயில் தொடர்ந்து இயக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின் தீன் தயாள் உபாத்யாயா ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தபோதுதான், அனைத்து பெட்டிகளின் பிரேக் அமைப்புகளும் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் பராமரிப்புப் பிரிவு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் என்ஜின் டிரைவர்களின் அலட்சியம் குறித்து தென்கிழக்கு ரெயில்வே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற பாதுகாப்புக் குறைபாடுகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.