அதிர்ச்சி வீடியோ... ஆசிரியை அடித்ததால் வகுப்பறையிலேயே சுருண்டு விழுந்து பலியான 6 வயது சிறுவன்!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், வீட்டுப்பாடம் செய்யாததற்காக ஆசிரியை தாக்கியதில் 6 வயது சிறுவன் வகுப்பறையிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த சிறுவன் பிரணய் தேஜா (6) என அடையாளம் காணப்பட்டுள்ளான். குடும்பத்துடன் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்றுவிட்டு முந்தைய நாள் இரவு தாமதமாகத் திரும்பியதால், அந்தச் சிறுவனால் வீட்டுப்பாடத்தைச் செய்ய முடியவில்லை.
வகுப்பறையில் இருந்த சிசிடிவி காட்சிகளின்படி, சிறுவன் கையில் ஸ்லேட்டுடன் பயத்துடன் நின்று ஆசிரியையிடம் கெஞ்சியுள்ளான். இருப்பினும், அந்த ஆசிரியை சிறுவனைக் கன்னத்தில் ஓங்கி அடித்த சில விநாடிகளிலேயே, அவன் நிலைகுலைந்து ஆசிரியை மீதே சுருண்டு விழுந்துள்ளான்.
பதற்றமடைந்த பள்ளி நிர்வாகம் சிறுவனை கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். ஆரோக்கியமாக இருந்த தங்களது மகனுக்கு நேர்ந்த நிலை குறித்து உடனடியாகத் தகவல் தெரிவிக்காமல், பள்ளி நிர்வாகமே நேரடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகப் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். பயத்தின் காரணமாகச் சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் சந்தேகிக்கப்படும் நிலையில், உடற்கூறாய்வு அறிக்கைக்குப் பிறகே உண்மை தெரியவரும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இச்சம்பவத்தைக் கண்டித்துச் சிறுவனின் உறவினர்களும் பொதுமக்களும் பள்ளி வளாகம் மற்றும் மருத்துவமனை முன் திரண்டு ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள ஆந்திர மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாரா லோகேஷ், தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.