அதிர்ச்சி வீடியோ - ‘ஸ்டாலின் ஒழிக’... நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட தவெக தொண்டர்களால் பரபரப்பு!

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்பது உறுதியாகியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தமிழகம் முழுவதும் உள்ள தவெக தொண்டர்கள் விசில்களை ஊதியும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு (மே 4) சென்னை மவுண்ட்ரோடு பகுதியில் தவெக தொண்டர்கள் செய்த கொண்டாட்டங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

வெற்றிப் போதையில் இருந்த தவெக தொண்டர்கள், மவுண்ட்ரோடு அருகே நடுரோட்டில் திரண்டு விஜய் பாடல்களுக்கு ஆட்டம்போட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறு ஏற்பட்டது. மேலும், கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘ஸ்டாலின் ஒழிக’ என்ற கோஷங்களை எழுப்பி அவர்கள் ஆடியது அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவெக தொண்டர்களின் இந்த அநாகரிகமான கொண்டாட்டம் மற்றும் கோஷங்கள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. ஒரு புதிய அரசியல் சகாப்தம் தொடங்கும் வேளையில், பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய தொண்டர்கள் இவ்வாறு நடந்து கொள்வது முறையல்ல எனப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், இது தவெக-வின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.