அதிர்ச்சி வீடியோ... கடற்கரை பாறையில் நின்று ரீல்ஸ்... அலையில் சிக்கி 2 இளைஞர்கள் மாயம்!

 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நண்பர்கள் தினத்தைக் கொண்டாடச் சென்ற இடத்தில், பாறை மீது நின்று 'ரீல்ஸ்' எடுத்த இரண்டு இளைஞர்கள் ராட்சத அலையில் சிக்கிக் கடலில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர். விசாகப்பட்டினம் அடுத்துள்ள கங்காவரம் கடற்கரைப் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நண்பர்கள் தினத்தைக் கொண்டாடுவதற்காக 4 பெண்கள், 3 ஆண்கள் என மொத்தம் 7 பேர் கொண்ட நண்பர்கள் குழு கடற்கரைக்கு வந்துள்ளனர். கடற்கரையில் இருந்த பாறையின் மீது ஏறி நின்று நித்து, தாமோதர் ஆகிய இரு இளைஞர்களும் 'ரீல்ஸ்' வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வந்த ராட்சத அலை ஒன்று இருவரையும் சுருட்டி இழுத்துச் சென்றது. இதில் இரு இளைஞர்களும் கடலில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகினர்.

தகவலறிந்து வந்த கடலோரப் பாதுகாப்புக் படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் கடலில் மாயமான இரு இளைஞர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆபத்தான பகுதிகளில் ரீல்ஸ் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் எனப் போலீசார் மீண்டும் எச்சரித்துள்ளனர்.