அதிர்ச்சி வீடியோ... நகைக்கடைக்காரர் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்து திருட முயன்ற பள்ளி  மாணவிகள்!

 

பீகார் மாநிலம் பாட்னாவின் தீபா பகுதியில் நேற்று பிற்பகலில் பார்ப்போர் நெஞ்சை பதற வைக்கும் ஒரு துணிகரக் கொள்ளை முயற்சி அரங்கேறியுள்ளது. அப்பகுதியில் தனியாக நகைக்கடை நடத்தி வரும் ராஜேஷ் குமார் என்பவரின் கடைக்கு, நேற்று மதியம் முகம் முழுவதும் மாஸ்க் அணிந்தபடி இரண்டு சிறுமிகள் வந்துள்ளனர். தங்களுக்குத் தங்கத் தோடு வேண்டும் என்றும், புதிய மாடல்களைக் காண்பிக்குமாறும் அவர்கள் கடைக்காரரிடம் கேட்டுள்ளனர்.

அவர்களின் பேச்சை நம்பிய கடை உரிமையாளர் ராஜேஷ் குமார், கடையின் லாக்கரில் இருந்து விலையுயர்ந்த தங்கக் காதணிகள் அடங்கிய பெட்டிகளை எடுத்து அந்தச் சிறுமிகளின் முன்னால் வைத்துள்ளார். அந்தச் சிறுமிகள் இருவரும் நகைகளைப் பார்ப்பது போல நடித்துக் கொண்டே, கடையின் சூழலை உற்று நோக்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சிறுமி, தனது பையில் ரகசியமாக மறைத்து வைத்திருந்த 'பெப்பர் ஸ்பிரே'  பாட்டிலை திடீரென வெளியில் எடுத்து, கண் இமைக்கும் நேரத்திற்குள் கடை உரிமையாளர் ராஜேஷ் குமாரின் முகத்தில் சரமாரியாக அடித்துத் தாக்குதல் நடத்தியுள்ளார்.

Two girls tried robbing a jewellery shop in Digha, Patna with pepper spray. Owner dodged it, raised alarm, neighbours caught them on spot. CCTV captured the fail😭 pic.twitter.com/LfTXphRqBb

— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 13, 2026


கண்ணில் கடுமையான எரிச்சல் ஏற்பட்ட போதிலும், ராஜேஷ் குமார் நொடிப் பொழுதில் சாதுரியமாகச் செயல்பட்டு, கடையின் கவுண்டரை விட்டு மின்னல் வேகத்தில் வெளியில் ஓடிவந்து, கடையின் பிரதான இரும்பு ஷட்டர் கதவை வெளியில் இருந்து இழுத்துப் பூட்டினார். இதனால், நகைகளைச் சூறையாட நினைத்த அந்த இரு சிறுமிகளும் தப்பியோட முடியாமல் கடைக்கு உள்ளேயே மாட்டிக்கொண்டனர்.

இதையடுத்து, ராஜேஷ் குமார் எழுப்பிய சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன், கடைக்குள் சிக்கிய இரு சிறுமிகளும் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

பட்டப்பகலில் பள்ளிச் சிறுமிகள் இருவர் வாடிக்கையாளர்கள் போல நடித்து, கடைக்காரர் மீது ரசாயனத் தாக்குதல் நடத்தி நகைகளைக் கொள்ளையடிக்க முயன்ற இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிடிபட்ட சிறுமிகளைத் போலீசார் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இந்தத் திட்டமிட்ட கொள்ளை முயற்சியின் பின்னணியில் ஏதேனும் பெரிய கடத்தல் கும்பல் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.