அதிர்ச்சி வீடியோ... காதலன் வீட்டு மாடியில் ஏறி நின்று இளம்பெண் தற்கொலை மிரட்டல்!

 

காதலனைத் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி அவரது வீட்டின் மொட்டை மாடியில் ஏறிய 21 வயது பெண், உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில், தற்கொலை  மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போலீசார் அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாக மீட்டனர்.

ஹடா பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கும், அப்பகுதியில் வசிக்கும் கோபால் என்பவருக்கும் சுமார் 2  ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக கோபால் உறுதியளித்ததாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். ஆனால் திருமணம் குறித்துப் பேசியபோது அவர் விலகிச் சென்றதாகக் கூறி, கோபால் மீது திருமண வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்துள்ளார்.


இந்நிலையில், சனிக்கிழமை கோபாலின் வீட்டுக்குச் சென்ற அந்தப் பெண், திருமணம் செய்ய வேண்டும் எனக் கோரி மாடியில் ஏறி உயிரை மாய்த்துக் கொள்வதாக மிரட்டியுள்ளார். இதனால் அங்கு பொதுமக்கள் திரண்டனர்.

தகவலறிந்து வந்த போலீசார் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அவரைப் பாதுகாப்பாகக் கீழே இறக்கினர். புகார் தொடர்பாகவும், திருமணப் பிரச்சினை குறித்தும் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.