அதிர்ச்சி வீடியோ... உயரத்திலிருந்து ஆழமில்லாத நீச்சல் குளத்திற்குள் டைவ் அடித்த இளைஞர் தலையில் அடிபட்டுப் மரணம்!
மகாராஷ்டிர மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மால்வன் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில், தனது நண்பர்களுடன் பொழுதுபோக்கிற்காகச் சென்ற 25 வயது இளைஞர் ஒருவர் நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரின் ஆழம் தெரியாமல், உயரத்தில் இருந்து நீச்சல் குளத்திற்குள் குதித்த போது, தலையில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர், நண்பர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரான ஸ்ரேனிக் தகாலே என்பவர் தனது நண்பர்களுடன் மால்வன் பகுதிக்குச் சுற்றுலா வந்துள்ளார். மால்வன் தாலுக்காவில் உள்ள வைரி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான தனியார் ரிசார்ட்டில் அவர்கள் தங்கியிருந்தனர். நேற்று மாலை ரிசார்ட் வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
ஸ்ரேனிக் தகாலே நீச்சல் குளத்தின் குறிப்பிட்ட அந்தப் பகுதி தண்ணீர் குறைவாக, ஆழமற்ற பகுதி என்பதை முன்கூட்டியே கவனிக்கவில்லை. அவர் குளத்தின் அருகே இருந்த உயரமான பகுதியிலிருந்து தண்ணீருக்குள் டைவ் அடித்துள்ளார். அவர் தண்ணீருக்குள் இறங்கிய அடுத்த கணமே, வேகம் கட்டுப்படுத்த முடியாமல் அவரது தலை நீச்சல் குளத்தின் தரைப் பகுதியில் மிக பலமாக மோதியுள்ளது.
இந்த மோதலின் காரணமாக, அவரது தலையின் உட்பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, அவர் தண்ணீருக்குள்ளேயே உடனடியாகச் சுயநினைவை இழந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்களும் ரிசார்ட் ஊழியர்களும் உடனடியாகக் குளத்திற்குள் குதித்து அவரை வெளியே மீட்டனர். உடனடியாக அவருக்கு முதலுதவி வழங்கி அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது போன்ற விபத்துகளைத் தவிர்க்கப் பாதுகாப்பு நிபுணர்களின் முக்கியக் குறிப்புகளைத் தெரிஞ்சுக்கோங்க.
நீச்சல் குளங்கள் மற்றும் ரிசார்ட்டுகளில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் தொடர்வதைத் தவிர்க்க, பொதுமக்கள்அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனப் பாதுகாப்பு நிபுணர்களும் அதிகாரிகளும் அறிவுறுத்துகின்றனர்.
ஆழம் தெரியாமல் குதிக்கக் கூடாது: நீச்சல் குளத்தின் ஆழம் எவ்வளவு என்பது துல்லியமாகத் தெரியாமல், அதில் ஒருபோதும் உயரமான இடங்களில் இருந்து குதிக்கவோ அல்லது மூழ்கவோ கூடாது.
தனியாக நீந்தக் கூடாது: ஒரு போதும் தனியாக நீச்சல் குளங்களுக்குச் செல்லக் கூடாது; எப்போதும் துணையுடன் அல்லது நன்றாக நீந்தத் தெரிந்த ஒருவருடன் மட்டுமே செல்ல வேண்டும்.
குழந்தைகள் பாதுகாப்பு: குழந்தைகளை ஆழமான குளங்களுக்குள் அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு எனத் தனியாக ஒதுக்கப்பட்ட சிறிய குளங்களை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
உயிர்காப்பாளர்கள் கண்காணிப்பு: எப்போதும் உயிர் காப்பாளர்கள் பணியில் இருக்கும் நீச்சல் குளங்களைப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது.
வழுக்கும் தரைப்பகுதி: நீச்சல் குளங்களைச் சுற்றியுள்ள தரைப்பகுதிகள் எப்போதும் வழுக்கும் தன்மையுடன் இருக்கும் என்பதால், அங்கு ஓடுவதையோ அல்லது அஜாக்கிரதையாக நடப்பதையோ தவிர்க்க வேண்டும்.
திறனுக்கு மீறிய ஆழம்: உங்களது நீச்சல் திறனுக்கு மீறிய அதிக ஆழமுள்ள பகுதிக்கு விழிப்புணர்வு இன்றிச் செல்லக் கூடாது.
ரசாயன விழிப்புணர்வு: பொழுதுபோக்கு நீச்சலுக்குப் பிறகு உடனே சுத்தமான தண்ணீரில் முறையாகக் குளிக்க வேண்டும். ஏனெனில், குளத்தில் கலக்கப்படும் குளோரின் போன்ற இரசாயனங்கள் சருமத்தையும் முடியையும் பாதிக்கக்கூடும்.