தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கிச்சூடு; 12 பேர் உயிரிழப்பு!

 

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில், மர்ம நபர்கள் நடத்திய சரமாரியான துப்பாக்கிச்சூட்டில் 12 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த 9 பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜோகன்னஸ்பர்க் நகரத்தின் மக்கள் அடர்த்தி மிகுந்த குடியிருப்பு பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று அரங்கேறியுள்ளது. வெள்ளை நிற வாகனம் ஒன்றில் வந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல், திடீரெனக் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது. முன்னறிவிப்பு ஏதுமின்றி, அவர்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கிகளால் அங்கிருந்த பொதுமக்கள் மீது சரமாரியாகச் சுடத் தொடங்கியுள்ளனர்.

தாக்குதல் நடந்தவுடன் அந்த மர்ம நபர்கள் தாங்கள் வந்த வாகனத்திலேயே அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டனர்.

தகவல் அறிந்த தென் ஆப்பிரிக்கக் காவல் துறையினர், அப்பகுதியை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தடயங்களைச் சேகரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் திட்டமிடப்பட்ட தாக்குதலா அல்லது வன்முறைக் குழுக்களுக்கிடையிலான மோதலா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் செயல்படும் குற்றக் கும்பல்களைக் கண்டறியத் தனிப்படை அமைக்கப்பட்டு, தப்பி ஓடிய மர்ம நபர்களைப் பிடிக்கச் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அடுத்தடுத்து நிகழும் இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், தென் ஆப்பிரிக்கக் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் அச்சத்தையும், பாதுகாப்பின்மை உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.