" மாணவர் விவரங்களை மத்திய அரசிடம் ஒப்படைப்பதா?" - தவெக அரசு அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு!
தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறிவிட்டு, மத்திய அரசின் 'அபார்' அடையாள அட்டை திட்டம் மூலம் மாணவர்களின் தனிப்பட்ட விவரங்களை மத்திய அரசிடம் ஒப்படைக்கத் துடிப்பதாகத் தமிழக வெற்றிக் கழக அரசு மீது முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மத்திய அரசின் கல்வித் திட்டங்களுக்குத் தமிழக அரசு தற்போது இணங்கிப் போவதாகக் குறிப்பிட்டு, தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள பதிவில், "தேசியக் கல்விக் கொள்கையை தமிழகத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தேர்தல் மேடைகளில் முழங்கிவிட்டு, மத்திய அரசின் 'ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள அட்டை' திட்டத்தின் கீழ் தமிழக மாணவர்களின் ஒட்டுமொத்த விவரங்களையும் மத்திய அரசிடம் தாராளமாக ஒப்படைக்கத் துடிப்பது ஏன்?
₹10,000 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தினாலும், மாணவர்களின் நலனுக்காகத் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று நெஞ்சுரத்தோடு நின்ற நமது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அந்த ஆளுமையும் துணிச்சலும் தற்போதைய தவெக அரசிற்கு வேண்டும்." என்று மத்திய அரசின் அழுத்தங்களுக்குத் தவெக அரசு அடிபணிந்து போவதாக திமுக தரப்பு தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
மாணவர்களுக்கான பிரத்யேக கல்வி அடையாள அட்டையான 'அபார்' திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், மறைமுகமாகத் தேசியக் கல்விக் கொள்கையைத் தவெக அரசு தமிழகத்திற்குள் கொண்டு வரப் பார்க்கிறது என்று அன்பில் மகேஷ் சாடியுள்ளார்.
ஏற்கனவே பள்ளி மாணவர்களின் அடையாள அட்டை விவகாரத்தில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்திருந்த பின்னணியிலும், தற்பொழுது அன்பில் மகேஷ் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துப் பதிவிட்டுள்ளது தமிழகக் கல்வி மற்றும் அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.