இந்திய கிரிக்கெட் அணியில்  புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

 

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இந்திய இருபதுக்கு இருபது கிரிக்கெட் அணி தற்பொழுது பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அயர்லாந்துடன் 2 போட்டிகளிலும், இங்கிலாந்துடன் 5 போட்டிகளிலும் இந்திய அணி மோத உள்ளது. இந்த முக்கிய தொடருக்கான அணியில் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணியை வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர், அதற்கு அடுத்த ஆண்டு பஞ்சாப் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற அனுபவம் கொண்டவர். இந்த புதிய அணியில் அவருக்கு உறுதுணையாக செயல்பட இளம் வீரர் திலக் வர்மா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சூர்யகுமார் யாதவ் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்றாலும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அணி புதிய உத்வேகத்துடன் களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் மற்றும் வருண் சக்ரவர்த்தி போன்ற முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இவர்களுடன் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி முதன்முறையாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்சித் ராணா ஆகியோர் வேகப்பந்து வீச்சுப் பிரிவை பலப்படுத்த உள்ளனர்.