நடுரோட்டில் எஸ்.ஐ. அடித்துக் கொலை... போதையில் ரீல்ஸ் எடுத்து அராஜகம்... தட்டிக்கேட்டதில் விபரீதம்!

 

தேனி சமதர்மபுரம் பகுதியில் மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்த கும்பலைத் தட்டிக்கேட்டு வீடியோ எடுத்த சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் குமார், அந்த கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தேனி சமதர்மபுரம் பகுதியில் நேற்று நள்ளிரவு மதுபோதையில் இருந்த இளைஞர்கள் சிலர், முக்கியச் சாலையை மறித்துப் பட்டாசுகளை வெடித்துச் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்காக 'ரீல்ஸ்' வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். இதனால் அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அப்போது ரோந்துப் பணியில் அவ்வழியாக வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் குமார், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பட்டாசு வெடிக்குமாறு எச்சரித்துள்ளார். ஆனால் அந்த கும்பல் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து இடையூறு செய்ததால், எச்சரிக்கையை மீறியவர்களைச் சட்டம்-ஒழுங்கு நடவடிக்கைக்காக செந்தில் குமார் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போதை கும்பல், கடமையில் இருந்த எஸ்.எஸ்.ஐ. செந்தில் குமாரைச் சூழ்ந்துகொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளது.

போதை கும்பலின் தாக்குதலில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த எஸ்.எஸ்.ஐ. செந்தில் குமாரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அசம்பாவிதங்களைத் தடுக்கத் தேனி சமதர்மபுரம் பகுதியில் இரவோடு இரவாகப் பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். காவல் அதிகாரியே அடித்துக் கொல்லப்பட்ட தகவலறிந்து தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கவுதம் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு சிசிடிவி கேமரா காட்சிகளைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட நடவடிக்கையாக, காவல் அதிகாரியைத் தாக்கிப் படுகொலை செய்த போதை கும்பலைச் சேர்ந்த 4 பேரைப் பிடித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உயர் காவல் அதிகாரியே போதை கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரம், தமிழக காவல் துறை வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.