சித்தர் பீட வளாகத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் ஆந்திராவில் கைது !

 

 

சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகரைச் சேர்ந்த 21 வயது வாலிபர் நரேஷ் என்ற நரேஷ்குமார், நேற்று முன்தினம் காலை வியாசர்பாடி சாமியார் தோட்டம் பகுதியில் உள்ள சித்தர் பீட வளாகத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பாக வியாசர்பாடி போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர். கொலையாளிகளை விரைந்து பிடிப்பதற்காகத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது.

இந்தச் சூழலில், ஆந்திர மாநிலத்தில் பதுங்கி இருந்த உதயசூரியன் நகரைச் சேர்ந்த 19 வயது பிரேம்குமார், 20 வயது விக்கி என்ற விக்னேஸ்வரன் மற்றும் 22 வயது ஜீவா ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், கொலை செய்யப்பட்ட நரேஷ்குமாருக்கும் அவரது நண்பரான சஞ்சய் என்பவருக்கும், கைதான விக்னேஸ்வரனுக்கும் இடையே நீண்ட நாட்களாகக் கடுமையான முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. நரேஷ்குமாரும் சஞ்சையும் சேர்ந்து விக்னேஸ்வரனை முன்னதாகக் கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் தங்களுக்குத் தொடர்ந்து ஆபத்து ஏற்படும் என்று கருதிய விக்னேஸ்வரன், தனது நண்பர்களுடன் சேர்ந்து நரேஷ்குமாரைத் தீர்த்துக் கட்ட ஒரு கணக்கச்சிதமான சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளார். அதன்படி, சித்தர் பீட வளாகத்தில் பிரேம்குமார், விக்னேஸ்வரன், ஜீவா, சிலம்பரசன் மற்றும் முத்து ஆகியோர் அமர்ந்து கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த போது, சிலம்பரசன் மூலம் நரேஷ்குமாருக்கு போன் செய்து சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளனர். அவர் அங்கு வந்தவுடன் தாங்கள் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியால் நரேஷ்குமாரை சரமாரியாக வெட்டிக்கொன்றுவிட்டு தப்பியோடியதை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இக்கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார்   தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.