“ஒழுங்கா கையெழுத்து போடுங்க... இல்லனா இருட்டுதான்!” - ஈரானுக்கு அமெரிக்கா கொடுத்த ‘கடைசி’ எச்சரிக்கை!
அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் இன்னும் கருக்கத் தொடங்கியுள்ளன. ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள அமெரிக்கா, தற்போது அந்த நாட்டுக்கு மிகக் கடுமையான ‘இறுதி எச்சரிக்கை’ ஒன்றையும் விடுத்துள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் 21 மணி நேரம் நடந்த முதல் கட்டப் பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் இன்றி முடிவடைந்தது. அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஏமாற்றத்துடன் நாடு திரும்பிய நிலையில், அமெரிக்காவின் போர் துறை மந்திரி பீட் ஹெக்சேத் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஈரானை அதிர வைத்துள்ளது.
அமைதி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடும் வரை, அந்த நாட்டுத் துறைமுகங்கள் மீதான முற்றுகை தொடரும். இதனால் ஈரானின் இறக்குமதி, ஏற்றுமதி முடக்கப்பட்டு கடும் பொருளாதார நெருக்கடி நீடிக்கும்.
பேச்சுவார்த்தைக்கு ஈரான் உடன்படவில்லை என்றால், அடுத்த கட்டமாக அந்நாட்டின் உள்கட்டமைப்புகள், மின்சார நிலையங்கள் மற்றும் எரிசக்தி மையங்கள் மீது குண்டுகள் வீசித் தாக்கப்படும் என ஹெக்சேத் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
தற்போது 3-வது நாளாக ஹார்மூஸ் ஜலசந்தி மற்றும் ஈரான் கடல் எல்லைகளை அமெரிக்கப் போர்க்கப்பல்கள் சூழ்ந்துள்ளன. ஈரானின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் முடக்கி, அந்நாட்டைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதே அமெரிக்காவின் தற்போதைய வியூகம்.
இருப்பினும், நம்பிக்கையூட்டும் விதமாக வரும் வாரத்தில் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளதாகப் பாகிஸ்தானில் உள்ள ஈரான் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் இந்த ‘பவர் பாலிடிக்ஸ்’ எங்கே போய் முடியுமோ என்ற அச்சத்தில் உறைந்து போயுள்ளன.