பயங்கரம்... குருத்வாராவில் சீக்கியர்கள் கோஷ்டி மோதல்...11 பேர் ரத்தம் சொட்டச் சொட்ட காயம்!

 

ஜெர்மனியின் மோயர் நகரில் உள்ள குருத்வாரா ஒன்றில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீக்கியர்களின் புனிதத் தலமான இங்கு திடீரென நுழைந்த ஒரு கும்பல், அங்கு இருந்தவர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலின் போது கத்தி, வாள் மற்றும் மிளகுப் பொடி தூவும் கருவிகள் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் படுகாயமடைந்த 11 பேர் ரத்தம் சொட்டச் சொட்ட மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் குருத்வாராவிற்கு விரைந்து வந்தனர். வான்வழியே ஹெலிகாப்டர்கள் மூலம் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. குருத்வாரா நிர்வாகக் குழுவுக்கு அண்மையில் நடந்த தேர்தலில் தோல்வியடைந்த தரப்பினர், அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றபோது இந்த வன்முறை வெடித்ததாகக் கூறப்படுகிறது. கோவில் நிதி மற்றும் நிர்வாகக் கட்டுப்பாடு தொடர்பான நீண்டகாலப் பகையே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

இந்தத் தாக்குதலின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், போலீசார் அங்கிருந்து காலி தோட்டாக்களைக் கைப்பற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புனிதத் தலத்திற்குள் தலைப்பாகைகள் சிதறிக் கிடக்க, சீக்கியர்களே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தற்போது அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, போலீசார் இது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.