வெள்ளி விலை ஒரே நாளில் ₹10,000 சரிவு - கிலோ ₹2,40,000 ஆகக் குறைந்தது!
சென்னையில் ஆபரண வெள்ளியின் விலை இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ₹10,000 வரை சரிந்து நுகர்வோர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த வெள்ளியின் விலை, சர்வதேசச் சந்தை மாற்றங்களால் மளமளவெனக் குறைந்து வருகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் விலை சரிந்துள்ளதால், வெள்ளி நகைகள் மற்றும் பொருட்கள் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நான்கு நாட்களாகச் சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ₹255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ₹2,55,000-க்கும் நிலையான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முதல் சரிவுப்பாதை தொடங்கின.
நேற்றைய விலை கிராமுக்கு ₹5 குறைந்து ₹250-க்கும், கிலோவுக்கு ₹5,000 குறைந்து ₹2,50,000-க்கும் விற்பனையானது. நேற்று மாலை நிலவரத்தை விட இன்று கிராமுக்கு மேலும் ₹10 குறைந்து ₹240 ஆகவும், ஒரு கிலோவுக்கு ₹10,000 குறைந்து ₹2,40,000 ஆகவும் ஆபரண வெள்ளி விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்கள் தொடர்பான கொள்கை முடிவுகள் மற்றும் உலகளாவிய தொழில்நுட்பப் பங்குகளின் வீழ்ச்சி காரணமாகச் சர்வதேசச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் மீதான முதலீடுகள் சரிவைச் சந்தித்துள்ளன.
இதன் நேரடித் தாக்கமாக இந்தியப் புல்லியன் சந்தையிலும் கடந்த 10 நாட்களில் மட்டும் வெள்ளியின் விலை அதன் உச்ச வரம்பிலிருந்து அதிகபட்சமாக கிலோவுக்கு ₹30,000 வரை சரிவடைந்துள்ளது. இதேபோல இன்றைய தினம் தங்கத்தின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளதால் ஆபரணப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.