வங்கக்கடலில் சிங்கப்பூருக்குச் சென்றுக்கொண்டிருந்த கப்பல் மூழ்கி விபத்து: 2 பேர் மீட்பு, 22 பேரைத் தேடும் பணி தீவிரம்!

 

ஒடிசாவில் இருந்து சிங்கப்பூருக்கு 1,700 டன் இரும்புத் தாதுக்களை ஏற்றிச் சென்ற பனாமா நாட்டைச் சேர்ந்த சரக்குக் கப்பல், வங்கக்கடலில் திடீரென மூழ்கி விபத்துக்குள்ளானது.

பனாமா நாட்டைச் சேர்ந்த 'எம்.வி. ஓசேன் வின்னர்' என்ற 225 மீட்டர் நீளமுள்ள சரக்குக் கப்பல், ஒடிசாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டது. கப்பலில் சீனா (20), மியான்மர் (3) மற்றும் வங்காளதேசம் (1) ஆகிய நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 24 மாலுமிகள் பயணித்தனர்.

ஒடிசா மாநிலம் பாராதீப் கடற்கரையில் இருந்து 240 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்றபோது, ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கப்பல் கடலில் மூழ்கத் தொடங்கியது. பகல் 11.48 மணியளவில் கப்பலுடனான தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டது.

தகவல் அறிந்தவுடன் இந்தியக் கடலோரக் காவல் படை மற்றும் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கின. அப்பகுதியில் பயணித்த 'ஐசோபோஸ்' என்ற வணிகக் கப்பல் மூலம் 2 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 22 மாலுமிகளைத் தேடும் பணியில் கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர்கள் மற்றும் வரத், அன்மோல், விஜித் ஆகிய கப்பல்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விபத்து நடந்த பகுதியில் பயணிக்கும் பிற வணிகக் கப்பல்களும் மீட்புப் பணிக்கு உதவி செய்யும் வகையில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கப்பல் மூழ்கியதற்கான துல்லியமான காரணம் என்னவென்று தெரியவராத நிலையில், தொழில்நுட்பக் கோளாறா அல்லது மோசமான வானிலையா என்பது குறித்துத் துறைசார் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.