ஐசியூ-வில் பாடகி ஆஷா போஸ்லே... கவலைக்கிடமான நிலையில் ‘கின்னஸ்’ நாயகி - நிலைகுலைந்தது இசை உலகம்!!
இந்தியத் திரையுலகின் ஈடு இணையற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), திடீர் மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி, ஒட்டுமொத்த இசை ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லேவுக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் உடனடியாக மும்பையில் உள்ள புகழ்பெற்ற பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியத் திரையிசையில் கோலோச்சி வரும் ஆஷா போஸ்லேவின் சாதனைகள் மலைக்கத்தக்கவை. 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 12,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை படைத்தவர்.
2 தேசிய விருதுகள், 7 பிலிம்பேர் விருதுகள் மற்றும் தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட உயரிய கௌரவங்களைப் பெற்றவர். தமிழ், ஹிந்தி என பல்வேறு இந்திய மொழிகளில் தனது இனிமையான குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கட்டிப்போட்டவர்.
இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் சகோதரியான ஆஷா போஸ்லே, இந்திய இசையின் ஒரு அடையாளமாகத் திகழ்கிறார். அவர் விரைவில் நலம் பெற்று மீண்டு வர வேண்டும் எனத் திரையுலகப் பிரபலங்களும், கோடிக்கணக்கான ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.