30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் பாடகி எஸ்.ஜானகி உடல் தகனம்!

 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் 45,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, தனது காந்தக் குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடித்த புகழ்பெற்ற மூத்த பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி, கர்நாடக மாநிலம் மைசூரில் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவுக்குத் திரைத்துறையினரும், ரசிகர்களும், அரசியல் தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜானகி காலமானதைத் தொடர்ந்து, அவரது உடல் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்துவதற்காக அங்குள்ள புகழ்பெற்ற மகாராஜா கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்குத் தென்னிந்தியத் திரைத்துறையைச் சேர்ந்த முன்னணிப் பாடகர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான இசை ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு, பாடகி எஸ்.ஜானகியின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது: மைசூர் நகர வீதிகள் வழியாகக் கனியணஹூண்டியில் உள்ள அவரது பண்ணை தோட்டத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. கர்நாடக மாநில அரசின் உத்தரவின்படி, பண்ணை தோட்டத்தில் அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. காவல்துறை மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க ஜானகியின் மறைவுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

அரசு சடங்குகள் மற்றும் குடும்ப வழக்கப்படியான இறுதிச்சடங்குகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஜானகியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நெருங்கிய திரைத்துறையினரின் முன்னிலையில் அவரது உடல் பண்ணை தோட்டத்திலேயே தகனம் செய்யப்பட்டது.

ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகத் தென்னிந்தியத் திரை இசையுலகில் தனக்கென ஒரு பேரரசை உருவாக்கியவர் எஸ்.ஜானகி.  மிகச்சிறந்த பின்னணி பாடகிக்கான இந்தியாவின் உயரிய தேசிய விருதை 4 முறையும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநில அரசுகளின் திரைப்பட விருதுகளை 33 முறையும் வென்று சாதனை படைத்துள்ளார்.

கலைத்துறையில் தமக்கிருந்த அசாத்திய பங்களிப்பிற்காகக் கடந்த 2013-ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்குப் 'பத்ம பூஷன்' விருதை அறிவித்தது. எனினும், தென்னிந்தியக் கலைஞர்களுக்குத் தாமதமாகவே அங்கீகாரம் வழங்கப்படுகிறது எனக் கூறி, தனக்கு அறிவிக்கப்பட்ட அந்தப் பத்ம விருதை ஏற்க அவர் மறுத்துவிட்டார் என்பது அவரது கலைப்பயணத்தின் மிக முக்கியக் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.