ஆபரேஷன் நடக்கும்போதே பாடல் பாடிய பாடகர் சோனு நிகாம்!

 

பாலிவுட்டின் பிரபலப் பின்னணிப் பாடகர் சோனு நிகாம், தனக்கு அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்த போதே மன உறுதியோடு பாட்டுப் பாடி மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

பாடகர் சோனு நிகாம் நரம்பு அழுத்தப் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நரம்பு தொடர்பான அறுவை சிகிச்சையை மருத்துவர் நிதேஷ் சத்பாய் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மேற்கொண்டனர்.

ஆபரேஷன் தியேட்டரில் நிலவிய பதற்றமான சூழலைத் தணித்து, மருத்துவக் குழுவினரை உற்சாகப்படுத்தும் விதமாகப் பழம்பெரும் பாடகர் முகமது ரபியின் புகழ்பெற்ற "சுகானி ராத் தல் சுக்கி" என்ற பாடலைச் சோனு நிகாம் பாடினார். அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்த நிலையிலும், சிறிதும் ராகம் தப்பாமல் அவர் கம்பீரமாகப் பாடியது அங்கிருந்த மருத்துவக் குழுவினரையே நெகிழ வைத்தது.

அறுவை சிகிச்சையின் போது எடுத்த இந்த வீடியோவைச் சோனு நிகாம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "மருத்துவக் குழுவினருக்காக ஆபரேஷன் தியேட்டரில் பாடினேன். வலியிலும் நிற்காத பாடல்... இதுவே இசையின் இன்பம்!" எனக் குறிப்பிட்டுள்ளார். இக்காட்சி தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.