"கோயில்களில் பாடி வரும் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு" - முதல்வர் விஜய்க்கு பாடகர் வேல்முருகன் நன்றி!

 

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருக்கோயில்களுக்கான அறங்காவலர்களைத் தேர்வு செய்யும் மாநிலக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட பிரபலப் நாட்டுப்புறப் பாடகர் த. வேல்முருகன் அரசுக்கும் முதலமைச்சருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ள திருக்கோயில்களுக்குப் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களைத் தேர்வு செய்யும் சிறப்புக் குழுவின் உறுப்பினராகப் பாடகர் த. வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இச்செய்தி வெளியானதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எஸ். ரமேஷ் மற்றும் அறநிலையத் துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன் உள்ளிட்டோருக்கு வேல்முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த வாய்ப்பைக் வெறும் பதவியாகக் கருதாமல், இறைவனுக்குச் செய்யும் தொண்டாகவும் மிக முக்கியப் பொறுப்பாகவும் கருதிச் செயல்படுவேன் எனக் கூறியுள்ளார்.

பாமரனாகத் திருக்கோயில்களில் பக்திப் பாடல்களைப் பாடி வரும் தனக்கு இத்தகைய அரிய வாய்ப்பை வழங்கிய இறைவனுக்கும், அரசுக்கும், முதலமைச்சருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.