சின்க்பீல்டு செஸ்.. உஸ்பெகிஸ்தான் வீரரை வீழ்த்தி பிரக்ஞானந்தா முதல் வெற்றி!

 

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சின்க்பீல்டு கோப்பை செஸ் தொடரின் 2-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

கிராண்ட் செஸ் தொடரின் ஒரு பகுதியாக நடைபெறும் இப்போட்டியில் சர்வதேச அளவில் தலைசிறந்த 10 வீரர்கள் பங்கேற்று 9 சுற்றுகளாக மோதி வருகின்றனர். இச்சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஜவோகிர் சிந்தாரோவை எதிர்கொண்டார்.

இப்போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, மிகவும் பொறுமையாகவும் உத்திப்பூர்வமாகவும் விளையாடி 95-வது நகர்த்தலில் சிந்தாரோவை வீழ்த்தி வெற்றி பெற்றார். முதல் வெற்றி: முதல் சுற்று ஆட்டத்தைச் சமன் செய்திருந்த பிரக்ஞானந்தாவிற்கு, இந்த தொடரில் கிடைத்த முதல் வெற்றி இதுவாகும்.