சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுப்பு... மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு!

 

அம்பத்தூர் செல்லியம்மன் நகரைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பவரின் 5 வயது மகள் நெஸ்லின் ரியா, கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி கடுமையான காய்ச்சல் காரணமாகத் தேஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பெற்று வந்த சிறுமி மறுநாள் இரவு சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உரிய நிபுணத்துவம் இல்லாத டாக்டர் சரோஜினி மற்றும் டாக்டர் ராஜா திக் விஜய்தேஜா ஆகியோர் தன்னிச்சையாகச் சிகிச்சை அளித்ததாகப் போலீசில் புகார் அளித்தனர்.

பெற்றோரின் புகாரின் பேரில் வழக்கைச் சட்டப்பூர்வமாக அணுகிய காவல் துறை, இது தொடர்பாகத் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலிடம் அறிக்கை கோரியது. மருத்துவக் கவுன்சில் சமர்ப்பித்த அறிக்கையில் மருத்துவமனையின் அலட்சியப்போக்கு முறைப்படி உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மே மாதம் 8ம் தேதி அம்பத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தீபன்ராஜ், மருத்துவர்கள் சரோஜினி மற்றும் ராஜா திக்விஜய்தேஜா ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனைக்கு முறைப்படி சீல் வைத்தார்.

இந்நிலையில் மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தலின் பேரில், திருவள்ளூர் அடுத்த எறையாமங்கலம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் சடலம் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. வருவாய் கோட்ட அலுவலர் சு.ரவிச்சந்திரன், வட்டாட்சியர் சரண்யா, வருவாய் ஆய்வாளர் பிராங்க்ளின் பீனா, கிராம நிர்வாக அலுவலர் வினோத் குமார் ஆகியோர் முன்னிலையில், அரசு மருத்துவர் பால மணிகண்டன் பிரேத பரிசோதனை செய்தார். இந்த ஆய்வு அறிக்கையை வைத்து அடுத்தகட்ட மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.