காப்புக்காட்டில் தொழிலாளி சிறுத்தை தாக்கி பலி... புளி சேகரிக்க சென்ற போது பரிதாப உயிரிழப்பு!

 

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள மூன்று குட்டை மலை கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 62). கூலித் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டுப் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மூன்று குட்டை காப்பு காட்டிற்குப் புளி சேகரிப்பதற்காகச் சென்றுள்ளார். வழக்கமாக மாலை 4 மணிக்குக் காட்டை விட்டு வீடு திரும்புவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், குறிப்பிட்ட அந்த நேரத்தில் அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்குத் திரும்பி வராததால் கவலையடைந்த குடும்பத்தினர் இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மலை கிராம மக்களுடன் இணைந்து காட்டின் உள்ளே வெள்ளியங்கிரியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று பகல் 1 மணியளவில் காப்பு காட்டுப் பகுதியில் உடல் மிகவும் சிதைந்த நிலையில் வெள்ளியங்கிரி பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று அவரைத் தாக்கி, உடலைக் கவ்வி இழுத்துச் சென்று சிதைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் அந்த மலைக் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்துத் தகவல் அறிந்த காரமடை காவல்துறையினர் மற்றும் வனச்சரக அலுவலர் மனோஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். வெள்ளியங்கிரியின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சுனில் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட வன அலுவலரைத் தொடர்பு கொண்டு பொதுமக்களின் அச்சத்தைப் போக்கச் சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.