15 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை... சிவகங்கையில் பரபரப்பு!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கீழக்காவனூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் அஸ்வின், நேற்று முதல் திடீரென காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை அப்பகுதியில் உள்ள கண்மாய் ஒன்றில் அந்த சிறுவன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக பிணமாகக் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழிப்போக்கர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழச்சிவல்பட்டி போலீசார், சிறுவன் அஸ்வினின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொடூர சம்பவம் நடந்த இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்த முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த படுகொலை சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் அஸ்வின் எதற்காகக் கொலை செய்யப்பட்டார், இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார், இதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும், சிறுவனின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.