அக்கா கணவருடன் கள்ளக்காதல்... திருமணத்திற்கு நிச்சயித்த வாலிபரை குத்திக் கொன்று வனவிலங்குகளுக்கு இரையாக்கிய இளம்பெண்!
புனேயில் காதலனுடன் சேர்ந்து நிச்சயிக்கப்பட்ட மணமகனை 400 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டுக் கொன்ற சம்பவத்தின் அதிர்ச்சி விலகுவதற்குள், ஜார்க்கண்டில் தனது வருங்கால கணவரைக் கத்தியால் குத்திக் கொன்று, உடலை வனவிலங்குகளுக்கு உணவாக வீசிச் சென்ற மற்றொரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டம் ஜமுவா சௌக் பகுதியைச் சேர்ந்தவர் நீரஜ் (20). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஊர்மிளா என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்யப் பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், ஊர்மிளாவுக்குத் தனது சொந்த அக்கா கணவர் சுபாஷ் பஸ்வான் என்பவருடன் திருமணத்தை மீறிய காதல் உறவு இருந்துள்ளது. வீட்டில் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்ததால், நீரஜைத் திருமணம் செய்து கொண்டால் தனது காதலனான அக்கா கணவரைப் பிரிய வேண்டியது வரும் என்று ஊர்மிளா அஞ்சியுள்ளார்.
தனது காதலுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் வருங்கால கணவர் நீரஜைத் தீர்த்துக்கட்ட ஊர்மிளா மற்றும் சுபாஷ் பஸ்வான் ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு பயங்கரத் திட்டத்தைத் தீட்டினர். திட்டத்தின்படி, ஊர்மிளா தனது வருங்கால கணவர் நீரஜை மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு, பீகார் எல்லையில் உள்ள பேலா வனப்பகுதிக்குத் தனியாக வருமாறு ஆசையாகக் கூறி வரவழைத்துள்ளார்.
அங்கு ஏற்கனவே மறைந்திருந்த ஊர்மிளாவும், அவரது காதலன் பஸ்வானும் சேர்ந்து நீரஜை வழிமறித்துக் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தனர். கொலைக்குப் பிறகு சடலம் சிக்காமல் இருக்கவும், தடயங்களை அழிக்கவும் நீரஜின் உடலை வனவிலங்குகள் தின்று தீர்த்துவிடும் என்ற கொடூர எண்ணத்தில், உடலை அடர்ந்த வனப்பகுதியிலேயே வீசிவிட்டு இருவரும் தப்பியோடினர்.
மகன் நீரஜ் காணாமல் போனது குறித்து அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், நீரஜின் மொபைல் போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, அவரது இறுதி இருப்பிடம் பேலா வனப்பகுதி என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார் நீரஜின் உடலைக் கைப்பற்றினர். கொலையுண்ட நீரஜுக்கு முன்விரோதம் ஏதும் இல்லாததாலும், அவருக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்ததாலும் போலீசாரின் சந்தேகம் ஊர்மிளா மீது திரும்பியது. மேலும், கொலை நடந்த வனப்பகுதியில் ஊர்மிளாவின் மொபைல் சிக்னலும் இருந்ததைத் தொழில்நுட்ப ஆய்வில் போலீசார் உறுதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ஊர்மிளாவைப் பிடித்துப் போலீசார் பாணியில் விசாரித்தபோது, அவர் அக்கா கணவருடன் சேர்ந்து நீரஜைக் கொலை செய்த கொடூர உண்மையை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஊர்மிளா மற்றும் அவரது காதலனான சுபாஷ் பஸ்வான் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.