திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்.. .செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்!

 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், அவ்வப்போது ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், நேற்று காலை புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு அவர் வருகை தந்தார். கோவிலுக்கு வந்த சிவகார்த்திகேயன், அங்குள்ள நளதீர்த்தத்தில் நீராடிவிட்டு, சனீஸ்வர பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டார். பின்னர் தர்ப்பாரண்யேஸ்வரர் மற்றும் பிராணாம்பிகை சன்னதிகளிலும் மனமுருகி வழிபாடு நடத்தினார்.

சிவகார்த்திகேயன் கோவிலுக்கு வந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதால், காரைக்கால் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான ரசிகர்கள் கோவிலில் திரண்டனர். சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த சிவகார்த்திகேயனைச் சூழ்ந்து கொண்ட ரசிகர்கள், அவருடன் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டினர். கூட்ட நெரிசல் ஏற்பட்ட போதிலும், சிவகார்த்திகேயன் ரசிகர்களைப் பார்த்துப் புன்னகைத்தபடி கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். பின்னர் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி அவரை காரில் அனுப்பி வைத்தனர்.

சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் தனது 23-வது படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஒரு சிறிய இடைவெளியில், சனிப்பெயர்ச்சியையொட்டி அவர் இந்த ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.