சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: ஒருவர் பலி - 2 அறைகள் தரைமட்டம்! மீட்புப் பணி தீவிரம்!

 

சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியில் இயங்கி வரும் 'நடேஷ் பட்டாசு ஆலையில்' இன்று எதிர்பாராத விதமாகப் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று காலை தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வேதிப்பொருட்களுக்கு இடையே ஏற்பட்ட உராய்வு காரணமாக விபத்து நேரிட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வெடி விபத்தின் வீரியத்தால் பட்டாசு ஆலையின் இரண்டு அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின.

இந்த விபத்தில் சிக்கி ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டுச் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்துத் தகவல் அறிந்தவுடன் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் விரைந்து வந்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இடிபாடுகளுக்குள் யாராவது சிக்கியுள்ளனரா என்பதைத் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள், விபத்து நடந்த ஆலை உரிய உரிமத்துடன் இயங்கியதா? பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் இத்தகைய விபத்து நிகழ்ந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.