சேலத்தில் விபத்தில் 2 மாத கர்ப்பிணி, 11 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

 

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோர விபத்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆடிய ஆட்டத்தில், ஒரு குடும்பமே சிதைந்து போயுள்ளது.

மாலை 5:29 மணியளவில் ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி அரசுப் பேருந்து சென்றுக் கொண்டிருந்த நிலையில், உத்தமசோழபுரம் அடுத்த சூளைமேடு என்ற பகுதியில் சென்ற போது, பேருந்து ஓட்டுநர் அய்யந்துரையின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு எதிர் திசையில் (சேலம் - கோவை வழித்தடம்) பாய்ந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த டெம்போ டிராவலர் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து பயங்கரமாக மோதி, சர்வீஸ் சாலையில் புகுந்து நின்றது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் 4 பேர் உயிரிழக்க, பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன் (21), அவரது தாய் இருசாயி (40), டெம்போ டிராவலரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த செல்வராஜ், அமுதா, முருகன், சத்தியா (2 மாத கர்ப்பிணிப் பெண்), நித்திஷ்கா (5 வயது சிறுமி),  ஜீவிகா (11 மாத கைக்குழந்தை) என 8 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் 6 பேர் சேலம் நெய்க்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர். 11 மாதக் குழந்தையான ஜீவிகாவுக்கு மொட்டை அடிப்பதற்காக, கல்பாரப்பட்டி பகுதியில் உள்ள தங்களது குலதெய்வக் கோவிலுக்கு டெம்போ டிராவலரில் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அந்தக் குழந்தையின் மொட்டை விழா, மரண ஊர்வலமாக மாறியது அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து நடந்த இடத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விபத்துக்குக் காரணமான அரசுப் பேருந்து ஓட்டுநர் அய்யந்துரையை காவல்துறையினர் கைது செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.