"10 நாட்களில் 6 கொலைகள்... "Reels Model அரசு"- நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "கடந்த 10 நாட்களில் மட்டும் நாமக்கல், கரூர், திருப்பூர், சேலம், சிவகங்கை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் 6 முதியவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது."

"ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைக்கட்டுக்குள் வைக்க முடியாத முதலமைச்சர் விஜய்யின் நிர்வாகத் திறனின்மை கடும் கண்டனத்திற்குரியது."

"கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் மற்றும் போதை கலாச்சாரம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவும், குடும்பத்துடன் தனியாக இருக்கவும் அஞ்சுகின்றனர்."

"மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கும் வேளையில், திரு. விஜய் தலைமையிலான அமைச்சரவையோ ஆளுக்கொரு 'Reels' எடுத்து, ட்ரெண்டிங் பிஜிஎம் சேர்த்து வெளியிடுவதில் தான் தீவிரமாக உள்ளது. மாற்று சக்தி என நம்பி வாக்களித்த மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றத் துப்பில்லை என்றால், முதலமைச்சரும் அவரது அமைச்சர்களும் கூண்டோடு பதவி விலக வேண்டும்; தகுதியான தலைமையை தமிழக மக்கள் தேடிக் கொள்வார்கள்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.