6 வயது சிறுவனுக்கு மெகா ஜாக்பாட்... ரூ200 கூப்பனுக்கு பரிசாகக் கிடைத்த சொகுசு கார்
மத்தியப் பிரதேசத்தில் ரூ.200 மதிப்புள்ள அதிர்ஷ்டக் குலுக்கல் கூப்பன் மூலம் 6 வயது சிறுவனுக்கு சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான கார் பரிசாகக் கிடைத்துள்ளது. பாட்டி வாங்கிய கூப்பனில் பேரனின் பெயரை எழுதியிருந்த நிலையில், அவருக்கு முதல் பரிசு கிடைத்திருப்பது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாட்டி வாங்கிய கூப்பன்… பேரனுக்கு கிடைத்த பரிசு!
மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூரில் உள்ள சீலம்புரா பகுதியைச் சேர்ந்தவர் மேதான்ஷ் ராய்க்வார். இவரது பாட்டி கிரண் ராய்க்வார், சுமார் ஓராண்டுக்கு முன்பு ஆபாபுரி தாமில் நடைபெற்ற கர்பா நிகழ்ச்சியில் ரூ.200 கொடுத்து அதிர்ஷ்டக் குலுக்கல் கூப்பன் வாங்கியுள்ளார். அந்தக் கூப்பனில் தனது பேரனின் பெயரையும் எழுதியுள்ளார்.
ஃபார்ச்சூனர் காரை வென்ற சிறுவன்
இந்தக் குலுக்கலில் சிறுவனின் பெயருக்கு முதல் பரிசு கிடைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் குடும்பத்துக்குக் கிடைத்துள்ளது. நீண்டகாலமாக கார் வாங்க வேண்டும் என்ற கனவில் இருந்த குடும்பத்தினருக்கு இந்தப் பரிசு மகிழ்ச்சியான ஆச்சரியமாக அமைந்துள்ளது.
கார் கிடைத்ததைத் தொடர்ந்து சிறுவனுக்கு உறவினர்களும் அப்பகுதி மக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். புதிய காருக்கு பாரம்பரிய முறைப்படி பூஜையும் செய்யப்பட்டது. ரூ.200 கூப்பன் மூலம் இவ்வளவு பெரிய பரிசு கிடைத்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.அதிர்ஷ்டக் குலுக்கல்கள் வாய்ப்பை அடிப்படையாகக் கொண்டவை; கூப்பன் வாங்குவதால் பரிசு கிடைப்பது உறுதியாகாது.