கிலோ ரூ.200-ஐ தாண்டிய சின்ன வெங்காயம்... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
சென்னையில் சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.200-ஐ தாண்டியுள்ளது. வரத்து குறைந்துள்ளதால் வரும் நாட்களிலும் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக விலை உயர்ந்து, கடந்த 14-ம் தேதி கிலோ ரூ.120-க்கும், தொடர்ந்து ரூ.150-க்கும் விற்பனையானது. தற்போது சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ.200-ஐ தாண்டியுள்ளது. சில பெரிய கடைகளில் ரூ.210-க்கும், புறநகர் பகுதிகளில் ரூ.250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேடு சந்தைக்கு தினமும் 20 லாரிகளில் வந்து கொண்டிருந்த சின்ன வெங்காயத்தின் வரத்து, தற்போது 10 முதல் 12 லாரிகளாக குறைந்துள்ளது. இதுவே விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.லை உயர்வால் பல குடும்பங்கள் சின்ன வெங்காய பயன்பாட்டை குறைத்து, பெரிய வெங்காயத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளன. வரும் நாட்களில் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் கணித்துள்ளனர்.