பாம்பைக் கடிக்க வைத்து கணவன் கொலை... பள்ளி தாளாளர் மரணத்தில் கள்ளக்காதல் ஜோடியின் திடுக்கிடும் சதி அம்பலம்!

 

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் ஹஸ்தினாபூர் பகுதியில் தனியார் பள்ளி தாளாளர் அதுல் குமார் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், அதுல் குமாரின் மனைவியும் பள்ளியின் முதல்வருமான தாமினி மற்றும் பள்ளி பேருந்து ஓட்டுநர் துஷார் ஆகியோரின் கள்ளக்காதலே கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்தது. தங்களது கள்ளக்காதல் விவகாரம் கணவருக்குத் தெரியவந்து அவர் கண்டித்ததால், ஆத்திரமடைந்த கள்ளக்காதல் ஜோடி அதுல் குமாரை நிரந்தரமாக ஒழித்துக்கட்டத் திட்டம் தீட்டியுள்ளனர். முதலில் சாலை விபத்து மூலம் கொல்ல முயன்று அது தோல்வியடைந்ததால், காவல் துறையிடம் தப்ப இயற்கை மரணம் போல் காட்டப் பாம்பைக் கடிக்க வைக்கும் பாணியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

திட்டமிட்டபடி சம்பவத்தன்று இரவு தாமினி தனது கணவர் அதுல் குமாருக்குச் சாப்பிடும் பாலில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்து மயங்க வைத்துள்ளார். கணவர் ஆழ்ந்த மயக்க நிலைக்குச் சென்றதும், வீட்டின் அடுத்த அறையில் இருந்த குழந்தைகளை யாருக்கும் சந்தேகம் வராத வகையில் தாமினி வேறு அறைக்கு மாற்றியுள்ளார். அதன் பின்னர் நள்ளிரவில் கள்ளக்காதலன் துஷார் பிடித்து வந்த பயங்கர விஷப்பாம்பை மயக்கத்தில் இருந்த அதுல் குமாரின் படுக்கையில் திறந்து விட்டுள்ளனர். அந்த விஷப்பாம்பு கடித்ததில் அதுல் குமார் துடிதுடித்துச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மறுநாள் காலையில் கணவர் தற்செயலாகப் பாம்பு கடித்து இறந்தது போல் நாடகமாடித் தப்ப முயன்ற கள்ளக்காதல் ஜோடியின் சதியை காவல் துறையினர் தங்களது பாணியில் விசாரித்து அம்பலப்படுத்தியுள்ளனர். கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட தாமினி மற்றும் துஷார் ஆகிய இருவரையும் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கூகுள் மற்றும் குற்றத் தொடர்களைப் பார்த்துத் திட்டம் தீட்டி கணவனைப் பாம்பைக் கடிக்க வைத்துக் கொன்ற இந்த கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.