விடுதியில் சோகம்... பாம்பு கடித்ததில் 3 மாணவிகள் பரிதாபப் பலி !
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் உள்ள அரசு உதவி பெறும் உறைவிடப் பள்ளியில் பாம்பு கடித்ததில் 3 மாணவிகள் உயிரிழந்தனர். மேலும் 3 மாணவிகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. தனோரா தாலுகா ஜப்தலை கிராமத்தில் அமைந்துள்ள இந்தப் பழங்குடியினர் உறைவிடப் பள்ளி விடுதியில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது.
விடுதியில் நேற்று இரவில் மாணவிகள் வழக்கம்போல் தரையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தபோது அறைக்குள் திடீரென பாம்பு நுழைந்துள்ளது. அங்கிருந்த மாணவிகளை அடுத்தடுத்துக் கடித்ததில் மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஆசிரியர்களும் ஊமக்களும் மாணவிகளை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாதிக்கப்பட்ட மற்ற 3 மாணவிகளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையை அளித்து வருகின்றனர். மாணவர்களின் பாதுகாப்பைக் கவனிக்க வேண்டிய விடுதி நிர்வாகத்தின் அலட்சியமே இந்த விபத்திற்குக் காரணம் என்று பொதுமக்களும் பெற்றோர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்துக் காவல்துறையினர் தீவிரமான விசாரணையை நடத்தி வருவதுடன் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.