சோமாலியா கடற்கொள்ளையர்கள்... 6 இந்தியர்கள் உட்பட 10 மாலுமிகள் கடத்தல்!
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சோமாலியாவின் புண்ட்லாண்ட் மாகாணக் கடற்கைப் பகுதி அருகே துருக்கி நாட்டு ஆயுதங்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் கப்பலில் பணிபுரிந்த 6 இந்தியர்கள் உட்பட 10 மாலுமிகள் கடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமரூன் நாட்டுக்குச் சொந்தமான இந்தச் சரக்குக் கப்பல், துருக்கி நாட்டில் இருந்து ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாட்டிற்குச் சென்றுகொண்டிருந்தது. இந்தியப் பெருங்கடலில் சோமாலியாவின் புண்ட்லாண்ட் மாகாணம் இயல் மாவட்டத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் சென்றுகொண்டிருந்தபோது, கப்பலுக்குள் நுழைந்த கடற்கொள்ளையர்கள் மாலுமிகளைச் சிறைபிடித்துக் கப்பலைக் கடத்திச் சென்றுள்ளனர்.
இந்தியப் பெருங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களைச் சிறைபிடித்துக் கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து இதுபோன்ற கொள்ளைச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.